Posts Tagged ‘தமிழ்நாடு’

ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்,”அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு பயமாக இருக்கிறது.”

அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்,”தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய் இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,”என்றார்.

********
செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.அவன் சொன்னான்,”அய்யா,இந்த செருப்பை என் முதலாளி எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.”அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.

நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர் இவ்வாறு தீர்ப்பு கூறினார்,”செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.”

********

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்துவிட்டான்.தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ”தம்பி,நலமாக இருக்கிறாயா?”என்று கேட்டுவிட்டு,”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது மாதிரி தெரியவில்லையே!”என்று அன்புடன் கேட்டான்.தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் சேட்டை ஒளித்து  வைத்து விட்டாயே!”என்றானே பார்க்கலாம்!

Courtesy: தென்றல்

Advertisements

அந்த பக்கம் போகாதீங்க.ஏதோ ஆர்ப்பாட்டம் நடக்கிறது.”

ஆனால் அந்த பக்கம் போனால்தான் வீடுக்கு சீக்கிரம் போகலாம்.இது சுற்று வழி.

எப்படியோ ஆர்ப்பாட்டத்தில் நுழைந்து சமாளித்துப்போய் விட வேண்டியதுதான்.எதிர் வந்தவர் கூறியதை காற்றில் பறக்க விட்டேன்.
வேகமாக நடை போட்டேன்.

ஒரே பெண்கள் கூட்டம்.ஆவேசமாக கூக்குரல்[ அவர்கள் மொழியில் கோசம்] போட்டுக்கொண்டிருந்தனர்.
ஏதாவது மாதர் சங்கமாக இருக்கும்.எங்காவது பெண் பாலியல் பலாத்காரம் விவகாரமாக இருக்கலாம்.

ஆனால் கோசங்கள் சற்று வேறுமாதிரி இருந்தது.கவனித்தேன்.
“வெறும் சம்பளம் மட்டும் போதாது.விலைவாசிப் புள்ளிகளுக்கேற்ப அகவிலைப்படி வேண்டும்,,வேண்டும்,
ஆண்டுக்கொருமுறை மிகை ஊதியம் போனஸ் வேண்டும்,,வேண்டும்.”
அடடா.சத்துணவு பெண்களாக இருக்காலாம்.அல்லது அங்கன்வாடி இனத்தவர்களாக இருக்கலாம்.மகளிர் காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொன்டிருப்பது பார்வையில் பட்டது.

அது யார் .?

ஒரு ஓரமாக.காசி போல் தெரிகிறதே.
அது நண்பன் காசியேதான்.

ஏன் ஒரு ஓரமாக ஒளிந்து நிற்பது போல் இருக்கிறான்.என்னைப் பார்த்து விட்டான்.

கையை அசைத்து ரகசியமாக அல்லது பயத்துடன் கூப்பிடுவது தெரிந்தது.
வேகமாக அதே நேரம் அவனின் ரகசியத்துக்கு ஈடு கொடுத்து கள்ளக்காதலியை நெருங்கும் காதலன் போல் சென்றேன்.
“பேசாமல் அந்தவழியில் போயிருக்கலாம்லே”?
ஏன்?என்ன விசயம்.?
“இந்த ஆர்ப்படத்தில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதில்லையா?
“என்ன ஆர்ப்பாட்டம்.சத்துணவா,மகளிர் சங்கமா?இதில் நாம் மாட்டி என்ன ஆகப்போகிறது?”
“அங்கே பாருடா மடையா?”
நானும் மடையன்போல் பார்த்தேன்.அட எனது மனைவி.அருகில் காசியின் பத்தினி.அருகில் பார்க்க பார்க்க திகைப்பு.
தெருவில் உள்ள அத்தனை மனைவிகளும்.அங்கு இருந்து கோசமிட்டனர்.

என்ன இழவு போராட்டம்.?

“மனைவிகளுக்கு மாதா,மாதம் சம்பளம் கொடுக்க நீதிமன்றம் உத்திரவிட்டு விட்டது அல்லவா?
இவங்களுக்கு சம்பளம் மட்டும் போதாதாம்.அகவிலைப்படி.மிகை ஊதியம்,கொடுபடா ஊதியம்.இன்னமும் எத்தனைவகை ஊதியம் உள்ளதோ அத்தனையும் வேண்டுமாம்.அதான் இந்த ஆர்ப்பாட்டம்.’ காசி கிசு,சிசுத்தான்.எனக்கோ தலையை சுற்றிவந்தது.கீழே விழுந்து விடும் அபாயம் தெரிந்தது.
ஆனால் விழும் இடம் சாலை போட பல ஆண்டுகளுக்குமுன்பே கொட்டி வைத்த கற்குவியல்.
அதில் விழாமல் இருக்கவும் ,அதன் மீது அமர்ந்து சற்று சிரமபரிகாரம் செய்து கொள்ளும் எண்ணத்திடன் அருகில் போனேன்.

கால் செருப்பில் சிறு கல்.உறுத்தியது.

ஆர்ப்பாட்டத்தை சோகத்துடன் பார்த்துக்கொண்டே ,செருப்பினூடே புகுந்த சுண்டைக்காய் அளவு கல்லை எடுக்க முயற்சித்தேன்.செருப்பு கீழே கழன்று விழுந்து விட்டது.செருப்பை எடுத்தேன்.

“ஆர்ப்பாட்டத்தில் செருப்பையா வீசுகிறாய்?’
கழுத்தில் கை விழ திரும்பினேன்.பெண் காவலர்.சும்மா சொல்லக்கூடாது பார்த்தாலே பயம் வரும் தடித்த உருவம்.

‘நான்.செருப்பு,கல்லு,”

போலிசை பார்த்தாலே பயம்.
அதிலும் இது பெண் போலீசு.வார்த்தைகள் தடுமாற ஒருகையில் செருப்பும்-மறுகையில் கல்லுமாக கையும் -களவுமாக,

மாட்டிக்கொண்ட நிலை.காசியைப்பார்த்தேன்.பாவி பறந்து போய் பத்து நிமிடம் ஆகியிருக்கும் போல் தெரிந்தது.
செருப்பு கையோடே ஏதோ கசாப்பை பிடித்து விட்ட பெருமிதத்துடன்.தர,தர வென காலரை பிடித்து இழுக்க

‘நான் சும்மா,நான்,செருப்பு,நான் கல் .நான் இல்லை”

என தொடர்புகளே அற்ற வார்த்தை உளறல்களுடன் இழுபட்டு சென்றேன்.
சாதாரண பெண்ணை விட்டு தப்பிக்க இயலா அளவு பயம்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கல் ஒரு கண்ணாடிஅளவுக்கு என்னைப் பார்த்து கோபத்துடன் முன்னேற, அதிலும் எனது பத்தினி முகம் அதிகோரமாக தெரிய

“நான் இல்லை.நான் கல்.நான் செருப்பு ” என்ற உளறல் அதிகரித்தது.

‘நான் ஈ ‘என்று கூட சொன்ன ஞாபகம்.
—————————————————-
“என்ன.சொல்றீங்க .நீங்க இல்லீனா யாரிந்த நூறு ரூபாயை எடுத்தாங்க.”
மனைவி உலுக்க தூக்கம் கலைந்தது.

“என்ன.நூறு ரூபாய்?”

“உங்க சம்பளத்தை இந்த மாதம் எடுக்க ஏடிஎம் போய் பார்த்தால்.சம்பளத்தில் வழக்கத்தை விட நூறு ரூபாய் குறையா கணக்கு சீட்டு வருகிறதே”
அட தூக்கத்தில் என்னவோ கெட்ட கனவு.

“ஆபீசிலே ஒருத்தர் வீட்டு கல்யாணம்.எல்லோரும் நூறு ரூபாய் மொய் ஒரு ஆள்கிட்டே கொடுத்து விட்டோம்.அதான்.
உங்கிட்டே சொல்லனும்னு இருந்தேன் மறந்துட்டு.”அசடு வழிந்தேன்.

“வர,வர வெட்டி செலவு அதிகமாயிட்டு.பஸ்-காபி செலவுக்கு கொடுக்கிறதை குறைச்சாத்தான் சரி வருவீங்க.”

கோபம் வர தூக்கி எறிந்தேன்.தலயணையைத்தான்.
அதுவும் அவள் போய் விட்டாள் என்று நிச்சயம் ஆன பின்புதான்.

யாராவது மாதமானால் சம்பளத்தை அல்லது ஏடிஎம் அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு நம்  மாத செலவுக்கு பணம்தர மறுக்கும் பெண்சாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டீர்களா?

நான் முழு ஒத்துழைப்பு தர தயார்.

மனதளவில் தான்.

ஒன்று படுவோம்,

-போராடுங்கள்-

வெற்றி பெறுவோம்.

யாருங்க அது தங்கமணிக்கு லிங்க் அனுப்ப பாக்கிறது? எழுதினது நான் இல்லங்க: இவரு  தான்: http://suransukumaran.blogspot.in

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம பொன்ராஜ் .

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம பொன்ராஜ் க்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி – “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், பொன்ராஜ் .

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” – செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம பொன்ராஜ் .

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” – மனசுக்குள் பொன்ராஜ் .

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

பொன்ராஜ் அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

பொன்ராஜ் ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” – கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

—–
தமிழன்டா !!!!!

நீதி :- ஹாஹாஹா…! விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!

Courtesy: Sukumar Swaminathan

வருடம் : கி .பி 2150 , இடம் : தமிழ் நாடு

” பொது மக்கள் துணி காயபோடுறதுக்கு வசதியா தெருவெல்லாம் கல் தூணை நட்டு வச்சு , அதுக்கு குறுக்கால கம்பி கெட்டி வச்சிருக்காங்களே அந்த கால ஆட்சியாளர்கள்..அவங்கல்லாம் சிறந்த ஆட்சியாளர்கள்தானே டீச்சர்….! ”

” அப்படி இல்லை தம்பி , அந்த காலத்தில் இதற்கு பெயர் எலெக்ட்ரிக் போஸ்ட்..இதன் வழியாகத்தான் மின்சாரம் என்னும் பொருளை கொண்டு சென்றார்கள்..
அதைதான் நாம் துணி காயபோட பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.. ”

Courtesy: Facebook

இப்ப உள்ள சூழ்நிலையில் நம்ம அரசியல் தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் என்னவா இருக்கும்னு ஒட்டு கேட்டதுல இருந்து…..

ஜெயலிதா –  “நான் யாரு? எனக்கேதும் தெரியலியே? என்ன கேட்டா நான் சொல்ல வழியில்லையே!

ஓ.பி.எஸ் –    “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!”

ஜெயகுமார் – “சட்டி சுட்டதடா கை விட்டதடா…புத்தி கெட்டதடா!”

செங்க்ஸ்    –   “பொன்னான மனமே பூவான மனமே வைக்காத பொண்ணுமேல ஆச..”

நத்தம் விஸ்வு – “மின்சாரம் என்மீது பாய்கின்றதே….!”

சைதை துரைசாமி – “இது மௌனமான நேரம்..இளமனதில் என்ன பாரம்!”

கருணாநிதி – “என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே… ஆமா தாய்க்குலமே!”

ஸ்டாலின் –   “அண்ணன் என்ன தம்பி என்ன..சொந்தம் என்ன பந்தம் என்ன!”

அழகிரி –        “கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன ஊற விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன?”

கனிமொழி – “உலக வாழ்க்கையே ஒரு ஜெயிலு வாழ்க்கைதான்”

சீமான் – “பச்ச்ச்ச…..பச்ச மஞ்ச செவப்பு தமிழன் நான்…….”

கேப்டன் – “ஆண்டவன பார்க்கணும்..அவனுக்கும் ஊத்தணும்”

ராமதாஸ் – “எனக்கென ஒருவருவரும் இல்லாமல் போனாலும் உனக்கென நானிருப்ப்பேன்”

அன்புமணி – “எங்குத்தமா உங்குத்தமா ?யார நானும் குத்தம் சொல்ல?”

வைகோ – “நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?”

நாஞ்சில் சம்பத் – “போடாங்..கோ…..போடாங்..கோ ”

படித்ததில் பிடித்தது: வைகை ..

ஒரு நாள் முல்லா சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.எதிரே வந்த நண்பர்,முல்லாவின் முகத்தைப் பார்த்து அவர் எதோ வலியினால் அவதிப்படுவதுபோல உணர்ந்தார்.”என்ன முல்லா,தலை வலியா,வயிற்று வலியா?ஏன் என்னவோபோல இருக்கிறீர்கள்?”என்று கேட்டார்.முல்லா சொன்னார்,”வேறொன்றுமில்லை,நான் அணிந்திருக்கும் செருப்புக்கள் என் காலுக்கு மிகச் சிறியவையாக இருப்பதால் பாதத்தில் வலி எடுக்கிறது.””பின் ஏன் அவற்றை அணிந்திருக்கிறீர்கள்?என்று நண்பர் கேட்க,முல்லா சொன்னார்,”இந்த செருப்பினால் தான் ஒவ்வொரு நாளும் நிம்மதி அடைகிறேன்.நாள் முழுவதும் இந்த சிறிய செருப்புக்களை அணிந்து நடந்துவிட்டு பாதங்களில் வலியுடன்  வீட்டிற்குச் சென்று அவற்றைக் கழட்டியவுடன் கிடைக்கும் ஒரு விடுதலை உணர்வு இருக்கிறதே,அதற்கு இணை எது?இது ஒன்றுதான் நான் அடையும் மகிழ்ச்சி.எனவே இந்த செருப்புக்களை நான் விட மாட்டேன்.”

Courtesy: Google.

ஆமாங்க.சும்மா சும்மா’வ பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க.என்ன இத்தன ‘ சும்மா’ன்னு பாக்கீறீங்களா?.இது ‘சும்மா’ என்ற வார்த்தையை பற்றிய பதிவு.
‘சும்மா’ என்கிற வார்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம்.

·         ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் என்ன செய்தாய்?”என்று கேட்டால் அவன் கூறுவான் “சும்மாதான் இருந்தேன்.” என்று.அப்படியென்றால் “சும்மா” என்பது இங்கு எதையுமே செய்யாமல் வெட்டியாக இருந்ததை குறிக்கிறது.
·         ஒருவன் ஒரு பெண்ணை உற்று பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.அந்த பெண் அவனிடம் “எதுக்கு என்னை பார்த்தாய்?” என்று கேட்டால் அவன் கூறுவது “சும்மாதான் பார்த்தேன்” என்பதாகத்தான் இருக்கும்.இங்கு அவன் அந்த பெண்ணிடமிருந்து தப்பிக்க ஏதோ கூறவேண்டுமென்று ‘சும்மா’என்கிறான்.
·         “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டால் அதற்கு மற்றொரு கேள்வியை கேட்பீர்கள் “எதற்காக கேட்கிறாய்?”என்று.அதற்கு ஒரு சிலர் “சும்மாதான் கேட்கிறேன்” என்று பதில் அளிப்பார்கள்.இங்கு ‘சும்மா’ என்றால் ‘தெரிந்து கொள்ள’ என்ற அர்த்ததில் வருகிறது.
·         “என்ன பன்ற?”
“சும்மா,படிச்சுக்கிட்டு இருக்கேன்”
இங்கு ‘சும்மா’ என்பது கருத்தோடு ஒரு செயல் செய்வதை குறிக்கிறது.
·         “என்ன திடீரென்று என் வீட்டிற்கு வந்திருக்கிறாய்?”
“சும்மா,இந்த பக்கம் வேலை இருந்தது.அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன்”
இங்கு ‘சும்மா’ என்பது எதேர்ச்சையாக நடைபெற்ற செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
·         “நேர்க்காணல் என்னவாயிற்று?”
“வழக்கம் போலதான்.வேலை கிடைக்காது என்று தெரியும்.சும்மாதான் போயிட்டு வந்தேன்.”
இங்கு ‘சும்மா’ என்பது நடக்கப் போவதை தெரிந்துகொண்டே செய்வதை குறிக்கிறது.
·         “புது பேனாவா?”
“ஆமாம்.இந்த புத்தகத்தை வாங்கும்போது சும்மா கெடச்சுது.”
‘சும்மா’ என்பதற்கு ‘இலவசம்’ என்றும் பொருள் வருகிறது.
·         “இந்த குழந்தை சும்மா சும்மா அழுவுது” என்று நாம் கூறுவதுண்டு.இங்கு ‘சும்மா சும்மா’ என்றால் ‘அடிக்கடி’ என்று பொருள்படுகிறது.
·         “சும்மா இருக்கிறவனை ஏண்டா வம்புக்கு இழுக்குற?”
‘சும்மா’ என்றால் வம்புக்கு போகாமல் தன் வேலையைப் பார்த்தால் என்பது அர்த்தம்.
·         வகுப்பறையில் வாத்தியார் “எல்லாம் பேசாம சும்மா இருங்க” என்றால் அமைதியாக இருங்கள் என்று அர்த்தம்.
·         யாராவது உங்களை தொந்தரவு செய்துகொண்டிருந்தால் “கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறாயா?” என்று கேட்போம்.அதாவது “என்னை தொந்தரவு செய்யாதே” என்பதற்கு மாற்றாக அதை கேட்கிறோம்.
·         “அந்த பையில ஏதாவது இருக்கா?”
“இல்ல.சும்மாதான் இருக்கு.”
அதாவது காலியாக இருக்கிறது.
·         வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர் உங்களுக்கு எதுவும் எடுத்து வரவில்லை என்றால் “வெளிநாட்டிலிருந்து வருகிறீர்கள்.சும்மாவா வருவது?” என்று கேட்போம். ‘சும்மா’ என்பது வெறும் கையோடு வந்ததை குறிக்கிறது.
·         “அய்யோ! பாம்பு!”
“அய்யோ! எங்க?”
“ஏய்! பயந்துட்டியா? சும்மா சொன்னேன்.”
‘சும்மா’ என்பது ‘பொய்’ என்று பொருள் தருகிறது.

இந்த மாதிரி ‘சும்மா’ என்ற வார்த்தை நேரம் மற்றும் இடத்திற்கு தகுந்தாற்போல் தனது அர்த்தத்தை மாற்றிக்கொள்கிறது.‘சும்மா’பற்றி இன்னும் எழுதவேண்டும் என்றால் சும்மா எழுதிக்கிட்டே போகலாம். ஆனா உங்களுக்கு கடுப்பாகுமே!
அப்புறம் ஏன் இத எழுதினேன்னா கேக்கிறீங்களா? அது ஒன்னும் இல்லைங்க.நானும் வீட்டில சும்மாதான் இருக்கேன்.அதான் சும்மா எழுதினேன்.
சும்மா உக்காந்து யோசிச்சது: http://tamilcrazy.blogspot.in